Saturday, October 31, 2009

61 முதல் 70 வரை

61. தோழி கூற்று

     'நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
     கோளுற விளியார், பிறர் கொள விளிந்தோர்' எனத்
     தாள் வலம்படுப்பச் சேட் புலம் படர்ந்தோர்
     நாள் இழை நெடுஞ் சுவர் நோக்கி, நோய் உழந்து
5   ஆழல் வாழி, தோழி! தாழாது, 


     உரும் எனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங் கால்
     வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ,
     அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலருடன்
     அண்ணல் யானை வெண் கோடு கொண்டு,
10  நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் 


     கழல் புனை திருந்துஅடிக் கள்வர் கோமான்
     மழ புலம் வணக்கிய மா வண் புல்லி
     விழவுடை விழுச் சீர் வேங்கடம் பெறினும்,
     பழகுவர் ஆதலோ அரிதே -முனாஅது
15  முழவு உறழ் திணி தோள் நெடு வேள் ஆவி 


     பொன்னுடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின்
     ஒண் கேழ் வன முலைப் பொலிந்த
     நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே. 


தலைமகன் பொருள்வயிற் பிரிய, வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது



பாலை
மாமூலனார் 



62. தலைவன் கூற்று

     அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
     நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்,
     ஆகத்து அரும்பிய முலையள், பணைத் தோள்,
     மாத் தாட் குவளை மலர் பிணைத்தன்ன
5   மா இதழ் மழைக் கண், மாஅயோளொடு 


     பேயும் அறியா மறை அமை புணர்ச்சி
     பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்ப,
     கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின்,
     கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று
10  நெடுஞ் சுழி நீத்தம் மண்ணுநள் போல, 


     நடுங்கு அஞர் தீர முயங்கி, நெருநல்
     ஆகம் அடைதந் தோளே வென் வேற்
     களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி
     ஒளிறு நீர் அடுக்கத்து வியல்அகம் பொற்பக்
15  கடவுள் எழுதிய பாவையின், 


     மடவது மாண்ட மாஅயோளே. 


அல்லகுறிப்பட்டுழி, தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது


குறிஞ்சி
பரணர்

63. செவிலித்தாய் கூற்று

     கேளாய்; வாழியோ! மகளை! நின் தோழி,
     திரு நகர் வரைப்பகம் புலம்ப, அவனொடு
     பெரு மலை இறந்தது நோவேன்; நோவல்
     கடுங்கண் யானை நெடுங் கை சேர்த்தி,
5   முடங்கு தாள் உதைத்த பொலங் கெழு பூழி 


     பெரும் புலர் விடியல் விரிந்து, வெயில் எறிப்ப,
     கருந் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல்
     சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்,
     அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி,
10  கன்று காணாது, புன் கண்ண, செவி சாய்த்து, 


     மன்று நிறை பைதல் கூர, பல உடன்
     கறவை தந்த கடுங் கால் மறவர்
     கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ
     முதுவாய்ப் பெண்டின் செது காற் குரம்பை
15  மட மயில் அன்ன என் நடை மெலி பேதை 


     தோள் துணையாகத் துயிற்றத் துஞ்சாள்,
     'வேட்டக் கள்வர் விசியுறு கடுங் கண்
     சேக் கோள் அறையும் தண்ணுமை
     கேட்குநள் கொல்?' எனக் கலுழும் என் நெஞ்சே. 


தலைமகள் புணர்ந்துடன் செல்ல, செவிலி தன் மகளுக்குச் சொல்லியது


பாலை
கருவூர்க் கண்ணம் புல்லனார்


64. தலைவன் கூற்று

     களையும் இடனால் பாக! உளை அணி
     உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
     வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
     தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
5   ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்


     வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
     செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
     கடு நீர் வரித்த செந் நில மருங்கின்,
     விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
10  பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி, 


     மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
     உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
     ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
     கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
15  ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை 


     புலம்பு கொள் மாலை கேட்டொறும்
     கலங்கினள் உறைவோள் கையறு நிலையே. 


வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது


முல்லை
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்



65. தோழி கூற்று

     உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
     அன்னை சொல்லும் உய்கம்; என்னதூஉம்
     ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச்
     சேரிஅம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்;
5   நாடு கண் அகற்றிய உதியஞ்சேரற் 


     பாடிச் சென்ற பரிசிலர் போல
     உவ இனி வாழி, தோழி! அவரே,
     பொம்மல் ஓதி! நம்மொடு ஒராங்குச்
     செலவு அயர்ந்தனரால் இன்றே மலைதொறும்
10  மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி, 


     மீன் கொள் பரதவர் கொடுந் திமில் நளி சுடர்
     வான் தோய் புணரிமிசைக் கண்டாங்கு,
     மேவரத் தோன்றும் யாஅ உயர் நனந்தலை
     உயவல் யானை வெரிநுச் சென்றன்ன
15  கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறி, 


     காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்
     ஆறு கடிகொள்ளும் அருஞ் சுரம்; 'பணைத் தோள்,
     நாறு ஐங் கூந்தல், கொம்மை வரி முலை,
     நிரை இதழ் உண்கண், மகளிர்க்கு
20  அரியவால்' என அழுங்கிய செலவே! 


வேறுபட்ட தலைமகட்குத் தலைமகன் உடன்போக்கு வலித்தமை தோழி சொல்லியது


பாலை
மாமூலனார்


66. தலைவி கூற்று

     'இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
     மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
     செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
     சிறுவர்ப் பயந்த செம்மலோர்' எனப்
5   பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் 


     வாயே ஆகுதல் வாய்த்தனம் -தோழி!
     நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
     வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
     இயன்ற அணியன், இத் தெரு இறப்போன்
10  மாண் தொழில் மா மணி கறங்க, கடை கழிந்து, 


     காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
     பூங் கண் புதல்வனை நோக்கி, 'நெடுந் தேர்
     தாங்குமதி, வலவ!' என்று இழிந்தனன்; தாங்காது,
     மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப்
15  புல்லி, 'பெரும! செல் இனி, அகத்து' எனக் 


     கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், 'தடுத்த
     மாநிதிக் கிழவனும் போன்ம்' என, மகனொடு
     தானே புகுதந்தோனே; யான் அது
     படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, 'இவற்
20  கலக்கினன் போலும், இக் கொடியோன்' எனச் சென்று 


     அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
     இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
     பயிர்வன போல வந்து இசைப்பவும், தவிரான்,
     கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய
25  பழங் கண்ணோட்டமும் நலிய, 


     அழுங்கினன்அல்லனோ, அயர்ந்த தன் மணனே. 


பரத்தையிற் பிரிந்த தலைமகற்கு வாயிலாய்ப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது


மருதம்
செல்லூர்க் கோசிகன் கண்ணனார்



67. தலைவி கூற்று

     யான் எவன் செய்கோ? தோழி! பொறி வரி
     வானம் வாழ்த்தி பாடவும், அருளாது
     உறை துறந்து எழிலி நீங்கலின், பறைபு உடன்,
     மரம் புல்லென்ற முரம்பு உயர் நனந்தலை,
5   அரம் போழ் நுதிய வாளி அம்பின், 


     நிரம்பா நோக்கின், நிரயம் கொண்மார்,
     நெல்லி நீளிடை எல்லி மண்டி,
     நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
     பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
10  பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் 


     வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
     மொழி பெயர் தேஎம் தருமார், மன்னர்
     கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டன்ன
     உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை,
15  'உரு இல் பேஎய் ஊராத் தேரொடு 


     நிலம் படு மின்மினி போல, பல உடன்
     இலங்கு பரல் இமைக்கும்' என்ப நம்
     நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே! 


பொருள்வயிற் பிரிந்தவழி வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது


பாலை
நோய்பாடியார்


68. தோழி கூற்று

     'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
     தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
     இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
     கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
5   ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை 


     ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
     முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
     பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
     அன்னையும் கனை துயில் மடிந்தனள்; அதன்தலை
10  மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 


     வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
     சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
     படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
     வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
15  இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 


     தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
     கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
     புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
     வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
20  அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 


     பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே. 


தலைமகன் இரவுக்குறி வந்தமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது


குறிஞ்சி
ஊட்டியார்

69. தோழி கூற்று
 
     ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
     தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
     வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
     ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
5   ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
     செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
     பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
     கான மட மரைக் கணநிரை கவரும்
     வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
10  விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர் 


     பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
     அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
     நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
     மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
15  சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண் 


     அம்புடைக் கையர் அரண் பல நூறி,
     நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
     சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
     தலை நாள் அலரின் நாறும் நின்
20  அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே. 


'பொருள்வயிற் பிரிந்து நீட்டித்தான், தலைமகன்' எனக் கவன்ற தலைமகட்கு, 'வருவர்' என்பது படச் சொல்லித் தோழி ஆற்றுவித்தது


பாலை
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்


70. தோழி கூற்று

     கொடுந் திமிற் பரதவர் வேட்டம் வாய்த்தென,
     இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
     குறுங் கண் அவ் வலைப் பயம் பாராட்டி,
     கொழுங் கண் அயிலை பகுக்கும் துறைவன்
5   நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 


     அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
     பலரும் ஆங்கு அறிந்தனர் மன்னே; இனியே
     வதுவை கூடிய பின்றை, புதுவது
     பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
10  கானல் அம் பெருந் துறைக் கவினி மா நீர்ப் 


     பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
     விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
     வென் வேற் கவுரியர் தொல் முது கோடி
     முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை,
15  வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த 


     பல் வீழ் ஆலம் போல,
     ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே. 


தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது


நெய்தல்
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்

No comments:

Post a Comment