Saturday, October 31, 2009

சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு



     எட்டுத் தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகம் பற்றியன. இவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது அகநானூறு மட்டுமே. அகத் த்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்டமையால் இதனை, 'நெடுந்தொகை' என்றும் கூறுவர்.

     கடவுள் வாழ்த்துச் செய்யுளைத் தவிர்த்து இந்நூலில் 400 பாடல்கள் உள்ளன. இவை களிற்றியானை நிரை(1-120), மணி மிடை பவளம் (121-300), நித்திலக் கோவை (301-400) என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதுவல்லாமல் பாடல்கள் அனைத்தும் தக்கதொரு நியமத்தைக் கொண்டமைந்துள்ளன. ஒற்றைப்பட எண்ணாலான பாடல்கள் 200-ம் பாலைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 2,8 எனப்படுபவை 80-ம் குறிஞ்சித் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 4 எனப்படுபவை 40-ம் முல்லைத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைபட எண்களில் 5 எனப்படுபவை 40-ம் மருதத் திணையைச் சேர்ந்தவை. இரட்டைப்பட எண்களில் 10 எனப்படுபவை 40-ம் நெய்தல் திணையைச் சேர்ந்தவை.

     இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார். இத் தொகை பாடிய புலவர்கள் நூற்று நாற்பத்தைவர். அகநானூற்றுப் புலவர்கள் 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள். நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை. 



கடவுள் வாழ்த்து

     கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர்த்
     தாரன்; மாலையன்; மலைந்த கண்ணியன்;
     மார்பினஃதே மை இல் நுண் ஞாண்;
     நுதலது இமையா நாட்டம்; இகல் அட்டு,
     கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
5   வேலும் உண்டு, அத் தோலா தோற்கே; 



     ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே
     செவ் வான் அன்ன மேனி, அவ் வான்
     இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று,
     எரி அகைந்தன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை,
10  முதிராத் திங்களொடு சுடரும் சென்னி, 


     மூவா அமரரும் முனிவரும் பிறரும்
     யாவரும் அறியாத் தொல் முறை மரபின்,
     வரி கிளர் வயமான் உரிவை தைஇய,
     யாழ் கெழு மணி மிடற்று, அந்தணன்
15  தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால், உலகே. 


பாரதம் பாடிய பெருந்தேவனார்

No comments:

Post a Comment