Friday, October 30, 2009

21 முதல் 30 வரை

21. தலைவன் கூற்று

     'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
     துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
     அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
     தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
5   மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்

     செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
     வினை நயந்து அமைந்தனை ஆயின், மனை நகப்
     பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
     எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
10  மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்

     கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
     மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
     சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
     என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
15  பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை

     இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
     மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
     செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
     இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
20  செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்

     பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
     வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
     ஊறாது இட்ட உவலைக் கூவல்,
     வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25  இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,

     இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
     பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.

பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது

பாலை
காவன் முல்லைப் பூதனார்

22. தோழி கூற்று (அ) தலைவி கூற்று

     'அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும்
     கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன்
     மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல்
     இது என அறியா மறுவரற் பொழுதில்,
5   படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை

     நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என,
     முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற,
     களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி,
     வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து,
10  உருவச் செந்தினை குருதியொடு தூஉய்,

     முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள்,
     ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த
     சாரற் பல் பூ வண்டு படச் சூடி,
     களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
15  ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல,

     நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை
     தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப,
     இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து,
     நக்கனென் அல்லெனோ யானே எய்த்த
20  நோய் தணி காதலர் வர, ஈண்டு

     ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?

வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள் ஆற்றாளாக, தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட மொழிந்தது; தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்

குறிஞ்சி
வெறிபாடிய காமக்கண்ணியார்

23. தலைவி கூற்று

     மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
     பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
     புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
     நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
5   காடே கம்மென்றன்றே; அவல,

     கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
     பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
     அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
     தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
10  அனைய கொல் வாழி, தோழி! மனைய

     தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
     மௌவல், மாச் சினை காட்டி,
     அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது

பாலை
ஒரோடோ கத்துக் கந்தரத்தனார்

24. தலைவன் கூற்று

     வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
     வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
     தலை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
     சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
5   தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,

     வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
     விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
     மங்குல் மா மழை, தென் புலம் படரும்
     பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
10  தம் ஊரோளே, நன்னுதல்; யாமே,

     கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
     நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
     சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
     கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்பு,
15  தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து,

     கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
     இரவுத் துயில் மடிந்த தானை,
     உரவுச் சின வேந்தன் பாசறையேமே.

தலைமகன் பருவங் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்

முல்லை
ஆவூர் மூலங் கிழார்

25. தோழி கூற்று

     "நெடுங் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய்,
     அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத்
     தண் கயம் நண்ணிய பொழில்தொறும், காஞ்சிப்
     பைந் தாது அணிந்த போது மலி எக்கர்,
5   வதுவை நாற்றம் புதுவது கஞல,

     மா நனை கொழுதிய மணி நிற இருங் குயில்
     படு நா விளி யானடுநின்று, அல்கலும்
     உரைப்ப போல, ஊழ் கொள்பு கூவ,
     இனச் சிதர் உகுத்த இலவத்துஆங்கண்,
10  சினைப் பூங் கோங்கின் நுண் தாது பகர்நர்

     பவளச் செப்பில் பொன் சொரிந்தன்ன,
     இகழுநர் இகழா இள நாள் அமையம்
     செய்தோர் மன்ற குறி" என, நீ நின்
     பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
15  வாராமையின் புலந்த நெஞ்சமொடு,

     நோவல், குறுமகள்! நோயியர், என் உயிர்!' என,
     மெல்லிய இனிய கூறி, வல்லே
     வருவர் வாழி தோழி! பொருநர்
     செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப்
20  பொதியிற் செல்வன், பொலந்தேர்த் திதியன்,

     இன் இசை இயத்தின் கறங்கும்
     கல்மிசை அருவிய காடு இறந்தோரே.

பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது

பாலை
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்

26. தலைவி கூற்று

     கூன் முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
     மீன் முள் அன்ன, வெண் கால் மா மலர்
     பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும்
     அவ் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனைப்
5   புலத்தல் கூடுமோ தோழி! அல்கல்

     பெருங் கதவு பொருத யானை மருப்பின்
     இரும்பு செய் தொடியின் ஏர ஆகி,
     மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி
     முயங்கல் விடாஅல் இவை' என மயங்கி,
10  'யான் ஓம்' என்னவும் ஒல்லார், தாம் மற்று


     இவை பாராட்டிய பருவமும் உளவே; இனியே
     புதல்வற் தடுத்த பாலொடு தடைஇ,
     திதலை அணிந்த தேம் கொள் மென் முலை
     நறுஞ் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம்
15  வீங்க முயங்கல் யாம் வேண்டினமே;

     தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே; ஆயிடைக்
     கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி, மதவு நடைச்
     செவிலி கை என் புதல்வனை நோக்கி,
     'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
20  செல்வற்கு ஒத்தனம், யாம்' என, மெல்ல என்

     மகன்வயின் பெயர்தந்தேனே; அது கண்டு,
     'யாமும் காதலம், அவற்கு' எனச் சாஅய்,
     சிறு புறம் கவையினனாக, உறு பெயல்
     தண் துளிக்கு ஏற்ற பல உழு செஞ் செய்
25  மண் போல் நெகிழ்ந்து, அவற் கலுழ்ந்தே

     நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே?

தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது, ஆற்றாமையே வாயிலாகப் புக்கு, கூடிய தலைமகன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது

மருதம்
பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி

27. தோழி கூற்று

     "கொடு வரி இரும் புலி தயங்க, நெடு வரை
     ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்
     கானம் கடிய என்னார், நாம் அழ,
     நின்றது இல் பொருட் பிணிச் சென்று இவண் தருமார்,
5   செல்ப" என்ப என்போய்! நல்ல

     மடவை மன்ற நீயே; வடவயின்
     வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை,
     மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
     கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன
10  நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்

     தகைப்பத் தங்கலர்ஆயினும், இகப்ப
     யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத்
     தெள் நீர்க்கு ஏற்ற திரள் காற் குவளைப்
     பெருந்தகை சிதைத்தும், அமையா, பருந்து பட,
15  வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல்

     குருதியொடு துயல்வந்தன்ன நின்
     அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே?

செலவு உணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது

பாலை
மதுரைக் கணக்காயனார்

28. தோழி கூற்று

     மெய்யின் தீரா மேவரு காமமொடு
     எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
     கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
     அருவி ஆன்ற பைங் கால் தோறும்
5   இருவி தோன்றின பலவே. நீயே,

     முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
     பரியல் நாயொடு பல் மலைப் படரும்
     வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
     பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
10  கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி,

     ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
     'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
     பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
     உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது

குறிஞ்சி
பாண்டியன் அறிவுடைநம்பி

29. தலைவன் கூற்று

     "தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
     கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம் படின்
     வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
     தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்ப,
5   செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று

     இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
     மாவின் நறு வடி போல, காண்தொறும்
     மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
     நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
10  வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்

     தாழக் கூறிய தகைசால் நல் மொழி
     மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்
     எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
     வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
15  வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,

     கொம்மை வாடிய இயவுள் யானை
     நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
     அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
     உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
20  எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு

     நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
     உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
     மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!

வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது


பாலை
வெள்ளாடியனார்

30. தோழி கூற்று

     நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
     கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
     துணை புணர் உவகையர் பரத மாக்கள்
     இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
5   உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்

     ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
     அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
     பெருங் களம் தொகுத்த உழவர் போல,
     இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
10  பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,

     கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
     பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
     மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
     தண் நறுங் கானல் வந்து, 'நும்
15  வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?

பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது

நெய்தல்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்


No comments:

Post a Comment